

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரியான ஜிதேந்திர நரேன் டெல்லி நிதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் இதற்கு முன் அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமைச் செயலாளராக பதவி வகித்தார்.
இந்நிலையில், இவர் மீதும் ஆர்.எல்.ரிஷி என்ற மற்றொரு அதிகாரி (தொழிலாளர் ஆணையர்) மீதும் 21 வயது பெண் ஒருவர் போர்ட்பிளேரில் உள்ள அபெர்டீன் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இருவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் தனது புகாரில் கூறியிருந்தார். இப்புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தமான் நிகோபார் தீவுகள் காவல்துறை அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் ஜிதேந்திர நரேன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.