

நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் காவிரி, மீனவர் பிரச்சினை உட்பட தமிழகம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதிக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம், மக்களவை அதிமுக தலைவர் பி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து 'தி இந்து'விடம் அவர் கூறும்போது, ''காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பது, நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக கர்நாடகா நடந்துகொள்வது மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் விவாதிக்க அதிமுக உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினேன்.
தமிழகத்தில் வெள்ளம், வறட்சி என இரு பருவங்களாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், விலைவாசியும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்கவும் அனுமதி கோரியுள்ளோம். ரயில்வே மற்றும் ராணுவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பணி வாய்ப்புபாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும் விவாதிக்கப்படவேண்டும்'' என்றார்.
ரயில்வே மற்றும் ராணுவத்துக்கு மண்டல அளவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது தேசிய அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் வட இந்திய மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைப்பதாகப் புகார் உள்ளது. இதனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க அதிமுக முதன்முறையாக முயற்சிக்கிறது.
இத்துடன் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் அறிவிப்பின் மீதான விவாதத்திலும் அதிமுகபங்கேற்க உள்ளது. இதில் அந்த அறிவிப்பை எதிர்ப்பது போல் அன்றி, அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் சிரமங்களை தடுத்த நிறுத்த வலியுறுத்துவது என அதிமுகதிட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின் அதன் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துகட்சிகளின் மக்களவை தலைவர்கள், நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனந்தகுமார், இணை அமைச்சர் சுரேந்தரஜித் சிங் அலுவாலியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் துணை சபாநாயகரான தம்பிதுரையும் கலந்துகொண்டார். இதில் குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப உள்ள பிரச்சினைகள் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசினர்.