

ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் வேளையில், எல்லைப் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் ராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பீரங்கி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் அப்போது உடனிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் எல்லை நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டதாக தெரி கிறது. எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்தும் ஆத்திரமூட்டும் வகையிலான பாகிஸ்தான் தாக்கு தலை இந்திய வீரர்கள் எவ்வாறு கையாளுகின்றனர் என்பது குறித்தும் பிரதமரிடம் ராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் விளக்கியதாக தெரிகிறது.
இந்திய வீரர் பலி
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் நேற்று மேலும் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டங் களில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய ராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் படைகள் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தின.
ரஜவுரி மாவட்டத்தின் நவ்ஷெரா பகுதியில் நேற்று காலை 8.45 மணிக்கு பாகிஸ்தான் படையினர் தாக்குதல் தொடங்கினர். 82 மி.மீ. பீரங்கி குண்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கியால் சுட்டும் நேற்று நாள் முழுவதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியத் தரப்பில் தொடர்ந்து தகுந்த பதிலடி தரப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தார்.
பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ண காட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டன.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம் கள் மீதான ராணுவத்தின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு 100 முறைக்கும் மேலாக எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்து மீறி தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 12 அப்பாவி மக்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.