

ஐக்கிய அரபு எமிரகத்தில் வாழும் இந்திய தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி, இராக்கில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீண்டு வந்துள்ள இந்திய நர்ஸ்களுக்கு, அவருக்கு சொந்தமான மருத்துவமனைகளில் வேலை தருவதாக அறிவித்துள்ளார்.
தொழிலதிபர் பி.ஆர். ஷெட்டி, இராக்கிலிருந்து இந்தியா திரும்பிய நர்ஸ்களுக்கு, நேபால், பூட்டான், இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனைகளில் வேலை தருவதாக கேரளாவில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
நாடு திரும்பி வேலைக்காக எதிர்ப்பார்த்து இருக்கும் நர்ஸ்கள், அவரது அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராக்கில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பல நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திக்ரித் நகரில் நர்ஸுகள் இருந்த மருத்துவமனையை சுற்றிவளைத்து அவர்களை மோசுல் நகரத்திற்கு அழைத்து சென்றனர்.
கடந்த 3- ம் தேதி, நர்ஸ்களை மோசுலுக்கு அழைத்து சென்ற கிளர்ச்சியாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் விடுவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இராக்கில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் உதவியோடு, ஏர் இந்தியா விமான மூலம் இந்திய நர்ஸ்கள் 46 பேரும் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.