Published : 18 Oct 2022 05:39 PM
Last Updated : 18 Oct 2022 05:39 PM

பாதுகாப்பான உலகிற்கு அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: பாதுகாப்பான உலகை உருவாக்க அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுக்குழு புதுடெல்லியில் இன்று கூடியது. இதில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது: “உலகம் பாதுகாப்பானதாக இருக்கவும், மேலும் மேம்பாடு அடையவும் வேண்டுமானால் அதற்கு அனைத்து நாடுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஏனெனில், கூட்டுப் பொறுப்புதான் இதை உறுதிப்படுத்தும்.

பன்முகத்தன்மையும் ஜனநாயகமும் இந்தியாவின் மிகப் பெரிய அடையாளம். உலகிற்கான உதாரண நாடு இந்தியா. உலகம் முழுவதும் 195 நாடுகளில் இன்டர்போல் அமைப்பு இயங்கி வருகிறது. பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், பொது சட்டத்தின் கீழ் இது இயங்கி வருகிறது. அடுத்த ஆண்டு இன்டர்போல் தனது நூற்றாண்டை கொண்டாட இருக்கிறது. இன்டர்போலுக்கு இது மிக முக்கிய மைல் கல்.

உலகம் முழுவதிலும் மக்கள் சேவையில் முன்னணியில் இருப்பவர்கள் காவல் துறையினர். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முதலில் சென்று அதனை எதிர்கொள்பவர்களாக அவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களின் தியாகம் மிக மிக உயர்வானது. அவர்களின் அந்த தியாகத்திற்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

உலகம் இன்னும் சிறப்பான இடத்திற்குச் செல்ல சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஐ.நா அமைதிப் படைக்கு அதிக பங்களிப்பை அளிக்கும் நாடு இந்தியா. அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதிப்பு முதல் கரோனா தடுப்பூசி வரை உலகிற்கு ஏற்படும் பாதிப்பு எதுவாக இருந்தாலும், அதற்கு தீர்வு காண முன்னணியில் இருக்கும் நாடு இந்தியா. சர்வதேச பிரச்னைகளுக்குத் தீர்வு காண உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். உள்ளூர் அளவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் உலக ஒத்துழைப்பு அவசியம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x