நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் முக்கியம்: பினராயி விஜயன்

நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் முக்கியம்: பினராயி விஜயன்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் முக்கியம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நடைபெற்ற ஊழலற்ற கேரளா என்ற பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து பினராயி விஜயன் பேசியது: “ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் முக்கியம். இதை கருத்தில் கொண்டு கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக தென் மாநிலங்களிலேயே கேரளாவில்தான் ஊழல் அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஊழல் சம்பவங்கள் இருக்கலாம். என்றாலும், கேரளாவில் ஊழல் மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்ல முடியும். நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு உள்ளது.

அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, நேரடி பணி நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றில்தான் லஞ்சம் அதிக அளவில் இருந்தது. அதனை நாம் தற்போது கட்டுப்படுத்தி இருக்கிறோம். இது பெருமைப்படத்தக்க நமது சாதனை. சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவது, உறுதியான நடவடிக்கை, விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலமே ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும் . இன்றைய குழந்தைகள்தான் நாளைய இளைஞர்கள். ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை குழந்தைகள் மத்தியில் நாம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in