

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த கையறி குண்டு தாக்குதலில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உள்ளூர் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை, "சோபியானின் ஹார்மென் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில், உத்தரப் பிர தேசத்தின் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் காஷ்மீர் போலீஸார் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பட்டியலில் இல்லாத இந்த கலப்பின தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திவிட்டு எந்த தடயமும் விட்டுவைக்காமல் நழுவிச் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வழக்கம்போல ஈடுபடுகிறார்கள்.
இதனால் சம்பவம் நடைபெற்ற தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹார்மன் பகுதிகள் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். இதில் தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) உள்ளூர் "கலப்பின தீவிரவாதி" ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக பிடிபட்டார். ஹார்மனில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி இம்ரான் பஷீர் கனி அதே பகுதியில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை மற்றும் ரெய்டு நடைபெற்று வருகிறது.'' என்று தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று தெற்கு காஷ்மீரின் சோபியானில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த காஷ்மீரி பண்டிட் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாட்களுக்குள் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.