காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்தது - நாளை முடிவுகள் வெளியீடு

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்தது - நாளை முடிவுகள் வெளியீடு
Updated on
2 min read

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 96 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

கடந்த 1998 முதல் 2017 வரைகாங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த சோனியா காந்தி, உடல்நலக்குறைவு காரணமாக 2017 டிசம்பரில் பதவி விலகினார். அவரது மகன் ராகுல் காந்தி, 2017 டிசம்பர் 16-ல் கட்சி தலைவராகப் பதவியேற்றார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது. இதற்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதையடுத்து, 2019 ஆகஸ்ட் 10-ல் காங்கிரஸின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார்.

ஓராண்டுக்கு அவர் பதவியில் நீடிப்பார், அதன்பிறகு தேர்தல் மூலம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப் பட்டது. ஆனால், 3 ஆண்டுகளாக தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக மூத்த தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகினர்.

இந்த சூழலில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப் பட்டது. தேர்தலில் போட்டியிட சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மறுத்துவிட்டனர்.

கட்சி தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கலில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9,500 பேர் நேற்று வாக்கினை செலுத்தினர். இது 96 சதவீத வாக்குப் பதிவு ஆகும்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாக்களித்தனர். வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேபெங்களூருவில் தனது வாக்கினை செலுத்தினார். அவரை எதிர்த்துப்போட்டியிடும் சசி தரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்திய ஒற்றுமை பாத‌யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திநேற்று கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த வந்தார். காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோருடன் வரிசையில் நின்று ராகுல் காந்தி வாக்கை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் 40 பேர் அங்கு வாக்கு செலுத்தினர்.

மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “இது உட்கட்சி தேர்தல்நட்புரீதியாக போட்டியிடுகிறோம். சசி தரூர் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்துகூறினேன்" என்று தெரிவித்தார்.

சசி தரூர் கூறும்போது, “காங்கிரஸின் தலையெழுத்தை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். கட்சியில் மாற்றம் தொடங்கி உள்ளது. தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்" என்று தெரிவித்தார்.

மாநில தலைமை அலுவலகங்களில் பதிவான வாக்குகள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப்படும். அங்கு புதன்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அனைத்து மாநிலங்களில் பதிவான வாக்குச் சீட்டுகளும் ஒன்றாக குவிக்கப்பட்டு, குலுக்கப்படும். இதன் மூலம் எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்பது தெரியவராது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in