

பழைய வாகனங்களை ஒழித்துக் கட்ட முன்வருபவர்களுக்கு உரிய ஊக்கத் தொகை வழங்குவது குறித்த கொள்கைகளை மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் காற்று மாசு அபாய அளவை கடந்துள்ளதால் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை சாலையில் அனுமதிக்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடுத்த கட்டமாக 10 ஆண்டுகள் பழமை யான வாகனங்களை தடை செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. எனி னும் டெல்லியில் பழைய வாகனங் களின் போக்குவரத்து குறைய வில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 20-ம் தேதி பழைய வாகனங்களுக்கான பதிவை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தலைவ ரான நீதிபதி ஸ்வதந்தர் குமார் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘‘பழைய வாகனங்களை ஒழித்துக்கட்டும்படி உத்தரவு பிறப்பித்து ஓராண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழைய வாகன பயன்பாட்டை நிறுத்த முன் வருபவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்றெல் லாம் தீர்ப்பாயத்திடம் முன்பு வாக் குறுதி அளிக்கப்பட்டது. இதை செய்கிறோம்; அதை செய்கிறோம் என சொல்கிறீர்கள்.
ஆனால் வெளியே சென்றதும் எல்லாவற்றையும் மறந்து விடுகிறீர்கள். பழைய வாகனங்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கான முறைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்குவது குறித்து கொள்கை வரையறுக்கப்படும் என கனரக தொழில்கள் அமைச்சகம் உறுதியளித்திருந்தது. அதன்படி தெளிவான விதிகளை அமைச்சகம் வகுக்க வேண்டும்’’ என்றார்.
மேலும் பஞ்சாப், அரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் டெல்லி தலைமை செயலாளருடன் விவாதம் நடத்தி டெல்லி எல்லையிலேயே பழைய வாகனங்களை நிறுத்துவதற்கான பகுதிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.