

இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் சக்கரங்கள் வினோதமான ஒலி எழுப்பியதைக் கேட்டு, ரயில்வே அதிகாரிகளை முன்பே எச்சரித்ததாக பயணி ஒருவர் கூறுகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், மண்ட்சார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா(35) என்பவர் இந்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,
‘சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்தூரில் இருந்து பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டியில் ஏறினேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் உஜ்ஜைனில் இறங்கிவிட்டேன்.
அப்போது, ரயிலின் சக்கரத்தில் இருந்து விநோதமான ஒரு சத்தம் கேட்டது. எஸ் 2 பெட்டியில் ரயில்வே சீருடை அணிந்திருந்த அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து தெரிவித்தேன். ஆனால், அவர் அதனை முக்கியமானதாக கருதவில்லை.
ஆனால், நான் இறங்கிய 12 மணி நேரத்தில் அந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி, 100 பேர் இறந்துவிட்டனர் என்ற செய்தி வெளியானது. அதனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
விநோதமான ஒலி குறித்து நான் தகவல் தெரிவித்த அதிகாரியின் பெயர் எனக்குத் தெரியவில்லை. மத்திய பிரதேசத்தின் திவாஸ் மாவட்டத்தை, இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்தபோது நான் அவரிடம் பேசினேன்’ என்றார்.
பிரகாஷ் சர்மா கூறுைைவது குறித்து கருத்து கேட்க, ரட்லம் மண்டல ரயில்வே மேலாளர் மனோஜ் சர்மாவை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.