

ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் டெரக் ஓ பிரெய்ன், சுதீப் பந்தோபதாய் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 8-ம் தேதியன்று பிரதமரின் அறிவிப்புக்குப் பின்னர் நாடு முழுவதும் ரூ.500, 1000 செல்லாத பணமாகியது. டிசம்பர் 30-ம் தேதிக்குள் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால், அதன்பின்னர் அரசு அடுத்தடுத்து அறிவித்த சில கெடுபிடிகளாலும், ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்காமலும் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆரம்பம் முதலே திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த நோட்டு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நோட்டு நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்துமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
அதன்பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பாஜகவின் கூட்டணி கட்சிகளுள் ஒன்றான சிவசேனாவும் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.