‘‘இது மக்களுக்கான தீபாவளி பரிசு’’ - ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் அறிவித்த குஜராத் அரசு

‘‘இது மக்களுக்கான தீபாவளி பரிசு’’ - ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் அறிவித்த குஜராத் அரசு
Updated on
1 min read

காந்திநகர்: பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு இனி ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, குஜராத் மக்களுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், சிஎன்ஜி (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் (பிஎன்ஜி) ஆகியவற்றின் மீதான வாட் வரியையும் 10 சதவீதம் குறைத்து மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த வரிகுறைப்பால் சிஎன்ஜி ரு கிலோவுக்கு ரூ. 7 ஆகவும், பிஎன்ஜி ரூ.6 ஆகவும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிலிண்டர்கள் இலவச அறிவிப்பால் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 38 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் வாட் வரி குறைப்பால் 14 லட்சம் சிஎன்ஜி வாகன உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்று, சாமானியர்கள் விலைவாசி பாதிப்பில் இருந்தும் விடுபடுவார்கள் என்றும் குஜராத் அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட மாநில கல்வி அமைச்சரும், குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி, "வாட் வரி குறைப்பால் அரசுக்கு ரூ.1,650 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்றாலும், இது குஜராத் மக்களுக்கான தீபாவளிப் பரிசு" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in