Published : 17 Oct 2022 07:55 PM
Last Updated : 17 Oct 2022 07:55 PM

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கவனம் ஈர்த்த 10 விஷயங்கள்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்தத் தேர்தல் சார்ந்து கவனத்தை ஈர்த்த 10 தகவல்கள் குறித்து பார்ப்போம்.

  • புதுடெல்லி உள்பட நாடு முழுவதிலும் 65 வாக்குப்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 137 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரசில் தேசியத் தலைவர் பதவிக்கு நடக்கும் 6-வது தேர்தல் இது.
  • புதுடெல்லியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு காலை 11 மணி அளவில் தனது மகளும் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தியுடன் வந்து வாக்களித்தார் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது நிகழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைக் காலம் காத்துக்கொண்டிருந்தேன்” எனக் குறிப்பிட்டார்.

  • காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் பெல்லாரி அருகே உள்ள சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்ட வாகன வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருவதால், அவரும் அவரோடு யாத்திரையில் பங்கு பெற்றவர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக இந்தச் சிறப்பு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது.
  • கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார், தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சித் தலைவர்களும் அமைப்பும் மாற்று வேட்பாளருக்கு ஆதரவாக இருந்ததால், எங்கள் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனினும், காங்கிரஸ் கட்சிக்கான மறுமலர்ச்சி தொடங்கிவிட்டதாகவே நம்புகிறேன். மல்லிகார்ஜூன கார்கேவிடம் தொலைபேசியில் இன்று பேசினேன். முடிவு எவ்வாறாக இருந்தாலும் நாம் நண்பர்களாக இருப்போம் என்றேன்" என குறிப்பிட்டார்.

  • கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தனது வாக்கினை பதிவு செய்த மல்லிகார்ஜூன கார்கே பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சசி தரூரும் நானும் நண்பர்கள். இருவரும் இணைந்து கட்சியை வலுப்படுத்துவோம். தரூர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்றார்.
  • தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூர் தோற்பது 100% உறுதி என காங்கிரஸ் எம்.பியும் கோவா முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தின்ஹா தெரிவித்தார். பனாஜியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சசி தரூர் எனது நண்பர். நான் அவரை சந்தித்திருந்தால், போட்டியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பேன். ஏனெனில், எல்லோரும் மல்லிகார்ஜூன கார்கேவைத்தான் ஆதரிப்பார்கள். நீங்கள் தோற்பது 100% உறுதி எனும்போது எதற்காக போட்டியிட வேண்டும்" என குறிப்பிட்டார்.

  • தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி, "9,500 பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். 96% வாக்குகள் பதிவாகி உள்ளன. அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை" என குறிப்பிட்டார்.
  • "ஜனநாயகபூர்வமான முறையில் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. இது காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் பெருமிதம் தரும் விஷயம். காங்கிரஸ் கட்சியில் மட்டுமே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். உண்மையான ஜனநாயக நடைமுறையை நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம்" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

  • காங்கிரசில் கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியுமே தலைவர்களாக இருந்துள்ளனர். ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்தில் முதல்முறையாக காந்தி - நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் (புதன்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
  • காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் யாராக இருந்தாலும் அவர் காந்திகளின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், யார் தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும் அவரை கட்டுப்படுத்துபவர்களாக காந்திகள் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x