Published : 17 Oct 2022 06:20 AM
Last Updated : 17 Oct 2022 06:20 AM

இந்தியில் எம்பிபிஎஸ் படிக்க புத்தகங்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

போபால்: இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார்.

நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்றுள்ள மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற்கூறியல், மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களுக்கான புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:

இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். இனி, கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது. அவர்கள் தங்கள் சொந்த மொழியிலேயே பெருமை யுடன் மருத்துவம் படிக்கலாம்.

பிற மொழிகளில் எம்பிபிஎஸ்

தேசிய கல்விக் கொள்கையின்ஒரு பகுதியாக இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு தொடங்கப்பட்டது. விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும்.

மேலும் 8 பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்களின் தாய்மொழிக்கு பிரதமர் மோடிஅதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இது ஒரு வரலாற்று முடிவாக அமைந்துள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜகஅரசு, நாட்டிலேயே முதன்முறையாக இந்தியில் மருத்துவக் கல்வியைத் தொடங்கி, பிரதமர் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 97 நிபுணர்கள் இந்தஇந்தி எம்பிபிஎஸ் பாடப்படிப் புக்கான புத்தகங்களை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இருந்து இந்தியில் பாடப்புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கு 232 நாட்கள் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x