

புதுடெல்லி: சாமானிய மக்கள் வாழ்க்கையை எளிமையாக்க 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டிஜிட்டல் வங்கிக் கிளைகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது:
நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை குறிக்கும் விதமாக 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் தற்போது தொடங்கி வைக்கப் பட்டுள்ளன. இதில், காஷ்மீர் வங்கியின் இரண்டு டிஜிட்டல் வங்கிக் கிளைகளும் அடக்கம்.
பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகள் இணைந்து நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இந்த டிஜிட்டல் கிளைகளை அமைத்துள்ளன. இப்புதிய கிளைகள் மூலம், சேமிப்பு கணக்கை தொடங்குதல், இருப்பு நிலை அறிதல், பாஸ்புக் பிரின்டிங் செய்தல், பணப் பரிமாற்றம், ஃபிக்ஸட் முதலீடு செய்தல், கடன் விண்ணப்பம், காசோலைகளுக்கான பணத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை டிஜிட்டல் வடிவில் பொதுமக்கள் பெறலாம்.
இதன்மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கை முறை எளிதாகும். இப்புதிய கிளைகள், நாட்டின் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை மேம்படுத்தும். சாதாரண மக்கள் தங்களின் அன்றாட செயல்பாடுகளை எளிதாக்கிக் கொள்ளவும் இந்த திட்டம் பெரிதும் உதவும்.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்னர் "போன் பேங்கிங்" முறை நடைமுறையில் இருந்தது. அதற்கு மாற்றாக "டிஜிட்டல் பேங்கிங்" முறையை முன்னெடுக்க பாஜக அரசு முயற்சி மேற்கொண்டது. அது தற்போது நனவாகியுள்ளது.
இந்தியாவின் நீடித்த பொரு ளாதார வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருப்பதில் டிஜிட்டல் வங்கிச் சேவைக்கும் முக்கிய பங்கு உண்டு. வங்கி துறையானது நல்ல நிர்வாகம் மற்றும் சிறந்த சேவையை வழங்குவதற்கான ஒரு ஊடகமாக மாறியுள்ளது. "டிபிடி" எனப்படும் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கு மூலமாகவே பயன் களை பரிமாற்றம் செய்யும் நடைமுறை பல்வேறு இடைத் தரகு முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளதுடன், வெளிப்படைத் தன்மையையும் உறுதிப்படுத்து வதை சாத்தியமாக்கியுள்ளது.
மத்திய அரசு இதுவரையில் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் மூலமாக ரூ.25 லட்சம் கோடியை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைத்துள்ளது. மேலும், பிஎம்-கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் அடுத்த கட்ட உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்படவுள்ளது.
டிஜிட்டல் கிளை பொதுமக்களின் வங்கி அனுபவத்தை மேம்படுத்தும் என்பதுடன் அவர்கள் நிதிச் சேவையை அணுகுவதற்கான வாய்ப்பையும் சமமான அளவில் பரவலாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிஜிட்டல் வங்கிக் கிளை தொடக்க நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.