Last Updated : 17 Oct, 2022 06:56 AM

 

Published : 17 Oct 2022 06:56 AM
Last Updated : 17 Oct 2022 06:56 AM

மதரஸாக்களுக்கு விதி மீறி வரும் வெளிநாட்டு நிதி: உ.பி அரசு நடத்தும் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

கோப்புப்படம்.

புதுடெல்லி: பாஜக ஆளும் உ.பி-யில் பல ஆயிரம் மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் பல்வேறு சீர்கேடுகள் உள்ளதாக புகார்கள் உள்ளன. இவற்றை சரி செய்ய மதரஸாக்கள் அனைத்திலும் கள ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதன்படி கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கள ஆய்வு தொடங்கியது.

அதற்கு முஸ்லிம்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுகள் முடிவுறும் நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

உதாரணமாக, பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில், ராஜா தலாப், சதர் ஆகிய தாலுகாக்களில் 195 மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் 23 மதரஸாக்கள் மாநில அரசு நிதி பெறுகின்றன. அங்கீகாரம் பெற்ற 85 மதரஸாக்கள், அங்கீகாரம் பெறாமல் 87 மதரஸாக்கள் உள்ளன. 12 மதரஸாக்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்ற தகவல் இல்லை. 20 மதரஸாக்களில் 15-க்கும் குறைவான மாணவர்களுடன் நிதியுதவி பெறவதற்காகவே நடத்துகின்றனர். இதே நோக்கத்துக்காக மதரஸாவின் 50 சதவிகித மாணவ, மாணவிகள் அருகிலுள்ள பொதுக் கல்விக்கான பள்ளிகளிலும் பயில்கின்றனர். 10 மதரஸாக்களில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை.

அருகிலுள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 60 மதரஸாக்களுக்கு விதிகளை மீறி வெளிநாடுகளின் நிதி கிடைத்து வருகிறது. மதரஸாக்கள் சார்பில் உருது மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகள்நடத்தப்படுகின்றன. இவற்றில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச மறைக் கல்வி போதிப்பதாக படத்துடன் பல்வேறு வகைபுனையப்பட்ட செய்திகள் வெளியிடப்படுகின்றன. பொதுமக்கள் கண்களில் படாமல் நடத்தப்படும் இந்த பத்திரிகைகள் ஐக்கிய அரபு நாடுகளில் நிதி வசூல் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற நிதியை வசூலிக்கபல தரகர்களும் செயல்படுவதாகத் தெரிகிறது. இதையே தொழிலாகச் செய்து வரும் மறைக் கல்வியில் நன்கு சிறந்த இந்த மவுலானாக்களுக்கு சுமார் 40% வரை கமிஷன் தொகையும் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து உ.பி. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறும் போது, ‘‘மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 6,436 மதரஸாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாநில அரசின் மதரஸா பாடத் திட்டங்கள் போதிப்பதில்லை. இதுவரை 5,170 மதரஸாக்களில் கள ஆய்வு முடிந்துள்ளது. மீதியுள்ளவற்றையும் ஆய்வுசெய்வதற்கான பணி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் கண்களில் படாமல் நடத்தப்படும் இந்த பத்திரிகைகள் ஐக்கிய அரபு நாடுகளில் நிதி வசூல் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x