ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி செலவு உணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்

ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி செலவு உணவு பாதுகாப்புச் சட்டம்  நாடு முழுவதும் அமல்
Updated on
1 min read

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகமும், கேரளாவும் செயல்படுத்தத் தொடங்கியதை அடுத்து, நடப்பு நவம்பர் மாதம் முதல் இச்சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், நாடெங்கும் உள்ள 80 கோடி மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்குவதால் ஆண்டுதோறும், ரூ.1.4 லட்சம் கோடி செலவை மத்திய அரசு ஏற்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் (பாஜக அரசு) ஆட்சிக்கு வரும்போது, 11 மாநிலங்கள் மட்டுமே உணவு பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மாதாந்திர உணவு தானிய ஒதுக்கீடு, 45.5 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.

உணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், மிகக் குறைந்த விலையிலான இந்த உணவு தானியங்களை பெறுவதற்கு சட்டப்படி உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 81.34 கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கான மானியங்களுக்காக, ஆண்டுதோறும் ரூ.1,40,700 கோடியும், மாதந்தோறும் ரூ.11,726 கோடியும் மத்திய அரசுக்கு செலவு ஏற்படும். இதுவரை 71சதவீதம் ரேஷன் அட்டைகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன.

மீதமுள்ளவை விரைவில் இணைக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம், 2.62 கோடி போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டன. மின்னணு முறையிலான விற்பனை உபகரணங்கள், 1,61,854 ரேஷன் கடைகளில் செயல்பாடுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மானியம் மட்டுமல்லாமல் முகவர்களுக்கான தொகை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. மக்களுக்கு உணவுப்பொருள் வழங்குவதில் மாநில அரசுகள் பெருமை தேட வேண்டாம். 2016-17 நிதியாண்டில் இதுவரை மாநிலங்களுக்கு, 1,874 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பஸ்வான் கூறினார். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற மானிய விலை அடிப்படையில் மாதந்தோறும் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in