

சோபியான்: காஷ்மீர் பண்டிட்கள், தீவிரவாதிகளால் குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் காஷ்மீரில் அடிக்கடி நடைபெறுகின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீர் பண்டிட்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் சவுதரி குண்ட் பகுதியில் வசிக்கும் பூரன் கிரிஷன் என்பவர் நேற்று காலை பழத்தோட்டத்தில் வேலை செய்ய சென்று கொண்டிருந்தார். இவரை தீவிரவாதிகள் சிலர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். படுகாயம் அடைந்த பூரன் கிரிஷன் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பகுதியில் ராணுவத்தினரும், ஜம்மு காஷ்மீர் போலீசாரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் விடுதலைப் படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதல் நடந்தபோது பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் அருகில் இருந்தார் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என காஷ்மீர் டிஐஜி சுஜித் குமார் கூறியுள்ளார்.