

புதுடெல்லி: டெல்லியில் ‘கிசான் சம்மான் சம்மேளன் 2022’ நாளை தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு நாடு முழுவதிலும் 600 விவசாயிகள் வளர்ச்சி மையங்களை தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதிலும் விவசாயிகளுக்கு உதவ பல்வேறு வகை மையங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து அனைத்து உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், மத்திய வேளாண் துறை சார்பில் ‘பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா (பிஎம்கேஎஸ்கே)’ என்ற பெயரில் விவசாயிகளுக்கான வளர்ச்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இவற்றை நாளை டெல்லியில் தொடங்கும் ‘கிசான் சம்மான் சம்மேளன் 2022’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சம்மேளனத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து சுமார் 13,500 விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். வேளாண்மை தொடர்பான சுமார் 1,500 ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோரும் பங்கேற்கின்றனர். இவர்களின் 300 கண்காட்சி அரங்குகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
விவசாயம் தொடர்பான ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வேளாண் தொடர்புடைய இதர துறையினரும் இதில் கலந்து கொள்கின்றனர். இதனால் காணொலி வாயிலாகவும் நேரடி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்கேஎஸ்கே மூலம் ‘ஒரு நாடு ஒரு உரம்’ திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே உள்ள சுமார் 3.3 லட்சம் சில்லறை உர விற்பனையாளர்களை இந்த மையங்களில் இணைக்கவும் திட்டமிடப்படுகிறது. இதனால் இந்த மையங்கள் மாவட்ட அளவில் செயல்பட உள்ளன. இவற்றில் பயிர் சாகுபடிக்கான ஆலோசனைகள் கிடைக்கும். மண், விதைகள் ஆய்வு செய்து தரப்படும். வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களும் வாடகைக்கு கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் 12-வது தவணைத் தொகையை (ரூ.2,000) பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார்.