

பாட்னா: "பிரதமர் மோடி போலியானவர். அவர் உண்மையானவர் இல்லை" என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலன் சிங் விமர்சித்துள்ளார். சாதி ரீதியாக பிரதமர் மீது வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாட்னாவில் வெள்ளிக்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் லாலன் சிங் பேசினார். அப்போது அவர், "பாஜகவினரின் குணம் எப்போதுமே சிக்கலான ஒன்று. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது நாடு முழுவதும் சென்ற பிரதமர் மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று ஒன்று குஜராத்தில் இருக்கிறதா? அங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு மட்டுமே உள்ளது. மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும் இல்லை. அவர் குஜராத் முதல்வரானதும் தான் சார்ந்த சாதியை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டார். அவர் போலியானவர். உண்மையானவர் இல்லை" என்று தெரிவித்தார்.
லாலன் சிங்கின் இந்த விமர்சனம் குறித்து பிஹார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும், ஓபிசி மோர்ச்சாவைச் சேர்ந்தவருமான நிகில் ஆனந்த், “சமீப காலங்களில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங், மாநில முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் பிரதமர் மோடி, அமித் ஷா குறித்து மோசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மிகவும் வெட்கக்கேடானது, துரதிர்ஷ்டவசமானது. அமைதி இல்லாமை, மாயை, பிரதமராக வேண்டும் என்ற கனவு எல்லாம் சேர்ந்து நிதிஷ் குமார்ஜியின் மனநிலையை பாதித்துள்ளது. லாலன் சிங்ஜிக்கு எந்தவிதமான அரசியல் நாகரிகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஒரே குற்றச்சாட்டு: இதே போன்றதொரு குற்றச்சாட்டை 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூறியிருந்தது. பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பிரச்சினைகள் குறித்து பேசலாம் என்று கூறி காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜகவின் வெங்கையா நாயுடு நிராகரித்திருந்தார். 2019-ம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியும், அரசியல் ஆதாயத்திற்காக மோடி தனது சாதியை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்துவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது, “மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, உயர் வகுப்பில் இருந்த தனது சாதியை அரசியல் ஆதாயத்திற்காக பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர் இல்லை. அவர் தலித்துகளுக்கு எதிரானவர். ரோகித் வெமுலா சம்பவத்தில் இது நிரூபிக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.
மோடியை பழித்த ஆம் ஆத்மி தலைவர்: முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் கோபால் இடாலியா வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதில், “பிரதமர் மோடி ஒரு "நீச்" என்று சொல்லப்படுகிறது. எனக்கு அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக வேறு எந்த பிரதமாராவது வாக்குக்காக இப்படி ஒரு நாடகம் ஆடியிருக்கிறாரா என்று உங்களிடமிருந்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இப்படியான கீழ்மையான குணமுள்ள ஒருவர் இங்கு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார்.
உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பாஜக, பழைய இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்து வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.