Published : 15 Oct 2022 05:08 AM
Last Updated : 15 Oct 2022 05:08 AM

நாட்டிலேயே முதன் முறையாக ரூ.1,082 கோடி செலவில் கிருஷ்ணா நதி மீது கேபிள் பாலம்

கிருஷ்ணா நதி மீது ரூ.1,082 கோடி செலவில் கட்டப்பட உள்ள கேபிள் பாலத்தின் மாதிரி தோற்றம்.

அமராவதி: நாட்டிலேயே முதன் முறையாக, கிருஷ்ணா நதி மீது ஆந்திரா-தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் விதத்தில், ரூ.1,082.56 கோடி செலவில் கேபிள் (கம்பி) பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

புதிய கேபிள் பாலத்தை உலகதரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, கிருஷ்ணா நதி மீது 3 கி.மீ தொலைவிற்கு இந்த கேபிள் பாலம் அமையவுள்ளது. 30 மாதங்களில் இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.

தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சோமசீலா பகுதியில் தொடங்கும் இந்த கேபிள் மேம்பாலம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரில் நிறைவடையும்.

நல்லமல்லா வனப்பகுதி அருகே அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 3 கி.மீ தூரத்திற்கு கண்ணாடி நடைபாதையை கொண்டிருக்கும். எனவே, இதில் நடந்துசெல்வோர் மிக அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

பச்சை பசேல் என இருக்கும் வனப்பகுதிகள், கிருஷ்ணா நதியின் அழகு, ஸ்ரீசைலம் அணைக்கட்டு, மலைப்பகுதி என அனைத்தையும் ஒரே சமயத்தில் இந்த பாலத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம். மேலும், கோபுர வடிவ கேபிள்கள் இரவில் சிறப்பு மின் அலங்காரம் போன்றவையும் செய்யப்படும்.

இந்த பால கட்டுமானப் பணி முடிவடைந்தால், உலகிலேயே 2-வது கேபிள் பாலமாகவும், நாட்டிலேயே முதல் கேபிள் பாலமாகவும் பெயர் பெறும் என அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த கேபிள் பாலம் பணிகள் நிறைவடைந்தால், திருப்பதி - ஹைதராபாத் இடையே சாலை போக்குவரத்தில் பெரும் மாற்றம் நிகழும். அந்நகரங்களுக்கிடையிலான பயண தூரம் சுமார் 80 கி.மீ வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x