

புதுடெல்லி: காற்று மாசுபாட்டை தடுக்க தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுதாரர் ஒருவர், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை நாங்கள் இப்போது பட்டியலிட மாட்டோம். தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. நீங்கள் கடைசி நேரத்தில் வழக்குதொடுத்து இருக்கிறீர்கள். மனுதாரர் 2 மாதங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்.
எனவே இந்த விஷயத்தில் உடனடியாக விசாரித்து உத்தரவிட முடியாது. தற்போதைய சூழலில்,இந்த வழக்கில் தடை உத்தரவு எதுவும் பிறப்பித்தால், அந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அந்த விளைவுகளையும் நாம் பார்க்கவேண்டும். எனவே, தீபாவளி பண்டிகைக்கு பின்னர், மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.