Published : 14 Oct 2022 06:45 PM
Last Updated : 14 Oct 2022 06:45 PM

குஜராத் பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படாதது ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்

ராஜிவ் குமார்

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படாதது ஏன் என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடனும் முடிவுக்கு வருகின்றன. பதவிக் காலம் முடிவடைவதற்கு அதிகபட்சம் 6 மாத கால அவகாசம் இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையும் குஜராத் சட்டப்பேரவையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஏற்ப பொருந்தி உள்ளன.

தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியான உடன், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தல் அட்டவணை இன்று வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இமாச்சலப் பிரதேச தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அட்டவணை பிறகு வெளியிடப்படும் என கூறினார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் தேர்தல் ஆணையம் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இரண்டு மாநிலங்களுக்கு அடுத்தடுத்து தனித்தனியே தேர்தல் நடத்துவதாக இருந்தால், ஒன்றின் தேர்தல் நடந்து முடிந்து 30 நாட்களுக்குப் பிறகே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி என தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர், ஒன்றின் முடிவு மற்றொன்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த விதி அமலில் உள்ளதாகக் கூறினார்.

அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்கலம் முடிவடையும் தேதியில் இருந்து 40 நாட்கள் கழித்தே குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதால் இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்துவதில் விதிப்படி தவறில்லை என ராஜிவ் குமார் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, அங்கு வழக்கமாக எந்த காலகட்டத்தில் தேர்தல் நடக்கும், அம்மாநிலத்தின் வானிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் இம்முறையும் இவற்றை கருத்தில் கொண்டே தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறை காலம் மிக நீண்டதாக இருப்பதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என தெரிவித்த ராஜிவ் குமார், இரு மாநிலங்களின் தேர்தலை இணைத்து தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல் நடைமுறை காலம் மிக நீண்டதாக இருக்கும் என்பதால், அது தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.

இமாச்சலப் பிரதேசத்திற்கு தனியாக தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலம் 57 நாட்கள் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ராஜிவ் குமார், இதேபோல், பல மாநில தேர்தல்களை இணைத்து தேர்தல் நடத்தும்போது தேர்தல் முடிவுகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அதுவும் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இமாச்சலப் பிரதேசத்திலும் குஜராத்திலும் பாஜகதான் ஆளும் கட்சி. இமாச்சலப் பிரதேசத்தில் ABP நியூஸ் - சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பாஜக 46.80% வாக்குகளைப் பெறும் என்றும் காங்கிரஸ் 32.30% வாக்குகளைப் பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சி 17.40% வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமானால், அது அடுத்து நடைபெறும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அந்த வகையில், தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவது பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x