மொழிகள் மீது தாக்குதல் நடத்தினால்... - ஆர்எஸ்எஸ், பாஜகவை எச்சரித்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on
1 min read

சித்ரதுர்கா(கர்நாடகா): "கர்நாடகா மக்கள், அவர்கள் மொழிகள் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸும் தாக்குதல் நடத்தினால் அவர்கள் காங்கிரஸின் முழுபலத்தையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த யாத்திரை தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது.வியாழக்கிழமை நடந்த யாத்திரையில் சித்ரதுர்கா மாவட்டத்தின் மொலகல்முரு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர், "வேலையில்லாமல் இருக்கும் கர்நாடக இளைஞர்கள் தங்களின் போட்டித் தேர்வுகளை கன்னட மொழியில் ஏன் எழுதக்கூடாது என்று என்னிடம் கேட்கின்றனர். இளைஞர்கள் அவர்களின் தேர்வுகளை கன்னடத்தில் எழுத அனுமதிக்க வேண்டும். ஒரு மொழி என்பது பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மொழி என்பது வரலாறு, கலாச்சாரம், அது சிந்தனை வளம் மக்கள் அவர்களின் மொழியில் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் வேறு சில சிந்தனைகளை கொண்டுள்ளனர். அவர்களுக்கு கன்னடம் இரண்டாம்பட்ச மொழி தான். அது மதிக்கப்பட வேண்டியது இல்லை என்பது அவர்கள் எண்ணம். நமக்கு கன்னடம் முதன்மையாது. ஒருவேளை பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கன்னட மொழி மீது, கர்நாடகா மக்கள் மீது, கர்நாடகா கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடந்தினால், பின்னர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முழு பலத்தையும் பார்க்க வேண்டியது இருக்கும்.

கர்நாடகா மக்கள் எவ்வாறு வாழ வேண்டும், அவர்களின் குழந்தைகள் எந்த மொழியில் தேர்வுகளை எழுத வேண்டும் என்று வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. கர்நாடகா மக்கள் கன்னடம் பேச விரும்பினால், தமிழ்நாட்டு மக்கள் தமிழ் பேச விரும்பினால், கேரள மக்கள் மலையாளம் பேச விரும்பினால் அவர்களுக்கு அதற்கான உரிமை உண்டு, அதனை அனுமதிக்கவும் வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பை பரப்பி நாட்டை பிளவுபடுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. நாட்டை பிளவுபடுத்துவது என்பது நாட்டின் நலனிற்கு எதிரானது. அது நாட்டை பலப்படுத்துவற்கு பதிலாக பலவீனப்படுத்தும்" இவ்வாறு ராகுல் பேசினார்.

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுகின்றன. மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கப்படுவதில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சித் தலைவர் குமாரசாமி சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in