Last Updated : 14 Oct, 2022 04:53 AM

 

Published : 14 Oct 2022 04:53 AM
Last Updated : 14 Oct 2022 04:53 AM

ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி/பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

கடந்த பிப். 5-ல் கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்த‌து. இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.

இதற்கிடையே, இந்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொரடப்பட்டது. அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே, கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உட்பட 24 பேர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் நேற்று தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதி ஹேமந்த் குப்தா, "இந்த விவகாரத்தில், மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.

மாணவிகள் சீருடை குறித்து கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ய முடியுமா? ஹிஜாப் அணிவதற்கான கட்டுப்பாடுகள் அரசியல் அமைப்பின் 25-வது பிரிவை மீறுகிறதா? ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத நடைமுறையா என்பன உள்ளிட்ட 11 கேள்விகளை முன்வைத்து, இவ்வழக்கில் விசாரணை நடைபெற்றது. இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் மேல்முறையீட்டு மனுக்கள் எதிரானவை. எனவே, அவற்றைத் தள்ளுபடி செய்கிறேன்" என்று தீர்ப்பளித்தார்.

மற்றொரு நீதிபதி சுதான்ஷு துலியா, "ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக‌ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறேன். ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லாது. ஹிஜாப் அணிவ‌து அவரவர் தேர்வு. எனவே, கர்நாடக அரசு ஹிஜாபை தடை செய்வதாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்கிறேன். ஹிஜாப் போன்ற அத்தியாவசியமான மத நடைமுறையில் நீதிமன்றம் தலையிடுவது அவசியமில்லை என்பதால், அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்கிறேன். நான் மாணவிகளின் கல்வியையே முக்கியமாகக் கருதுகிறேன். கிராமங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்ந்து, இந்த தீர்ப்பை அளிக்கிறேன்'' என்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து இரு நீதிபதிகளும், "எங்கள் இருவரின் தீர்ப்பும் மாறுபட்டு வெளியாகியுள்ளதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கிறோம்" என்றனர்.

ஹிஜாப் தடை தொடரும்

இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும் போது, "உச்ச நீதிமன்றம் இன்னும் உறுதியான தீர்ப்பை அளித்திருக்கலாம். இருப்பினும் இதை வரவேற்கிறோம். மாறுபட்டத் தீர்ப்பு வந்திருப்பதால், இந்த வழக்கில் முந்தைய தீர்ப்பே செல்லும். அதன்படி, கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடரும். எந்த மத அடையாளங்களுக்கும் கல்வி நிலையங்களில் அனுமதியில்லை'' என்றார்.

மனுதாரர்களில் ஒருவரான முஸ்லிம் மாணவி கூறும்போது, "நாங்கள் சிறப்பான தீர்ப்பை எதிர்பார்த்தோம். நீதிபதி சுதான்ஷு துலியாவின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை வரவேற்கிறோம். முஸ்லிம் பெண்களின் கல்வியை முக்கியமாகக் கருதி, அவர் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறார். இவ்வழக்கில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்'' என்றார்.

அடுத்தது என்ன?

இரு நீதிபதிகளும் மாறுபட்டத் தீர்ப்பை வெளியிட்டுள்ளதால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான 3 அல்லது 5 நீதிபதிகள் அடங்கிய‌ அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்படும். இல்லாவிட்டால், வழக்கின் தன்மையைக் கருதி, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.

கூடுதல் அமர்வு இந்த மேல் முறையீட்டு மனுக்களை மீண்டும் முதலில் இருந்தே விசாரிக்கும்.

அதுவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே நடைமுறையில் இருக்கும். அதேசமயம், கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்க, தீர்ப்பில் எவ்விதக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x