

அனந்தபூர்: ஆந்திர மாநிலத்திலேயே மிகவும் வறட்சி மாவட்டமாக கூறப்படும் அனந்தபூரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனந்தபூர் நகரில் 12 காலனிகள் மற்றும் ருத்ரம்பேட்டை கிராமத்தில் 5 பஞ்சாயத்துகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. அப்பகுதிகளில் மின் துண்டிப்பு செய்யப்பட்டதால், இருள் சூழ்ந்துள்ளது. மற்ற ஊர்களுக்கும் இந்த பகுதிகளுக்கும் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு விட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், புதன் கிழமையன்று மாலை இப்பகுதிகள் வெள்ள நீரில் சிக்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. 5 அடி உயரம் வரை வெள்ள நீர் பாய்ந்தோடியது. வெள்ளத்தில் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருந்த பல குடிசை வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் பலர் கட்டிய துணியோடு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அனந்தபூர் வெள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் முகாம்களில் உள்ளவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி, உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.