செல்லா நோட்டு திட்டப் பின்னணியில் மகா ஊழல்: கேஜ்ரிவால் சரமாரி குற்றச்சாட்டு

செல்லா நோட்டு திட்டப் பின்னணியில் மகா ஊழல்: கேஜ்ரிவால் சரமாரி குற்றச்சாட்டு
Updated on
1 min read

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பின் பின்னணியில் மிகப் பெரிய அளவிலான ஊழல் ஒளிந்திருப்பதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால், “ஊழலை ஒழிக்கிறோம் என்ற பெயரில் பெரிய அளவில் ஊழல் ஒன்று நடைபெற்றுள்ளது. சில ஆதாரங்கள் வெளியாகியுள்ளன, டிவி சேனல்கள் அவற்றை காண்பித்து வருகின்றன. நான் கூறுவது ஒன்றும் புதிதல்ல.

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பை வெளியிடும்போது, முன்னதாகவே பாஜகவினருக்கும், நண்பர்களுக்கும் இந்த முடிவு தெரியப்படுத்தப்பட்டு விட்டது, அவர்களிடம் நிறைய கருப்புப் பணம் உள்ளது.

கடந்த 3 மாதங்களில் அனைத்து வங்கிகளிலும் பெரிய அளவில் தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதாவது பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இருக்கும். இதுதான் சந்தேகத்தை வரவழைக்கிறது. இதற்கு முந்தைய 4 மாதக் காலக்கட்டத்தில் டெபாசிட் குறைவாக இருந்திருக்கும் போது ஜூலை-ஆகஸ்ட் காலாண்டில் எப்படி டெபாசிட்கள் பெரிய அளவில் குவிந்தன? இவை யாருடைய பணம், எப்படி இவ்வளவு பெரிய டெபாசிட்கள் நடைபெற்றன?

இந்த முடிவினால் சாமானிய மக்கள் அல்லல் படும்போது கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் நிம்மதியாக அமர்ந்திருக்கின்றனர். புதிய நோட்டுகள் அவர்களுக்கு கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் வாசலில் மிகப்பெரிய வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர், இவர்களில் தொழிலதிபர்களோ, கருப்புப் பண முதலைகளோ இல்லை. கடை உரிமையாளர்கள், ரிக்‌ஷா, ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களே கியூவில் காத்திருக்கின்றனர்.

தங்கம் விலை அதிகரித்துள்ளது, கருப்புப் பணம் அதிகரித்துள்ளதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை. மேலும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் கருப்புப் பணப் பிரச்சினை தீரவில்லை.

மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர், கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்திற்கு கமிஷன் கொடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேலான டெபாசிட்களுக்கு 200% அபராதம் உள்ளது. 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தங்கள் மகள் திருமணத்திற்காக ரூ.5 அல்லது 6 லட்சம் சேமித்து வைத்திருக்கும் சாதாரண மக்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறீர்கள். கடவுள் உங்களை மன்னிக்கப்போவதில்லை.

உண்மையான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவுக்கு கொண்டு வராமல் தனக்கு தூக்கமில்லை என்று சூளுரைத்தார் நரேந்திர மோடி. ஆனால் அதனை ஒன்றும் அவரால் செய்ய முடியவில்லை. அந்தக் கணக்கு எண்கள் உள்ளது என்கிறார், அப்போது அவர்கள் யார் என்று கண்டுபிடித்து சிறையில் அடைக்க வேண்டியதுதானே?” என்று கடுமையாக சாடினார் கேஜ்ரிவால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in