வாக்காளர் பதிவுக்கான புதிய உத்தரவு ரத்து: ஜம்மு நிர்வாகம் நடவடிக்கை

ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கும் காட்சி | கோப்புப் படம்
ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கும் காட்சி | கோப்புப் படம்
Updated on
1 min read

ஜம்மு: ஜம்முவில் ஓராண்டுக்கும் மேலாக வசிப்பவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளத் தேவையான வசிப்பிடச் சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை வருவாய் அதிகாரிகளுக்கு (தாசில்தார்களுக்கு) வழங்கும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான சிறப்பு நடவடிக்கை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. அதன்படி, புதிய வாக்காளர்களைப் பதிவு செய்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், கடந்த முறை நடந்த திருத்தத்திற்குப் பிறகு இடம்பெயர்ந்த வாக்காளர்களை இடமாற்றம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு ஜம்முவுக்கு இடம்பெயர்ந்த பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணம் தங்களிடம் இல்லை என்றும், இதனால் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாத நிலை இருப்பதாகவும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஜம்மு துணை ஆணையருமான அவ்னி லவாசா புதிய உத்தரவு ஒன்றை கடந்த 11ம் தேதி பிறப்பித்தார். அதில், ஜம்முவில் ஓராண்டுக்கும் மேலாக வசிப்பவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதற்குத் தேவையான வசிப்பிடச் சான்றிதழ் அளிக்கும் அதிகாரம் வருவாய் அதிகாரிகளுக்கு (தாசில்தார்களுக்கு) வழங்கப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு பாஜக மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஜம்மு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, முதலில் இந்த உத்தரவு தேவையற்றது என்றும், இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்ததாகவும் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீரின் சிபிஎம் மூத்த தலைவரும் குப்கர் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளருமான தாரிகாமி, திரும்பப் பெறப்பட்ட உத்தரவின் நகல் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், ஜனநாயக நடைமுறையை பாதிக்கும் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த எவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளர் பட்டியலில் முறையற்ற முறையில் சேர்க்கப்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க குப்கர் கூட்டமைப்பின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, கடந்த 8ம் தேதி 14 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழுவில் குப்கர் கூட்டமைப்பில் உள்ள 5 கட்சிகள், அதோடு, காங்கிரஸ், சிவசேனா, டோக்ரா ஸ்வாபிமான் சங்கதன் கட்சி, டோக்ரா சதர் சபா போன்ற பல அரசியல் கட்சிகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in