

ஜன்சார்கா( குஜராத் ): சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே, ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்குக் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் கவுரவ யாத்திரையை அமித் ஷா ஜன்சார்கா நகரில் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவை கேலி செய்த கட்சி காங்கிரஸ். அந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்; ஆனால் எப்போது என்று சொல்ல முடியாது என அது கூறி வந்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, அயோத்தியில் வாக்குறுதி அளிக்கப்பட்ட அதே இடத்தில் ராமருக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-க்கு ஒப்புதல் அளித்தது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த மிகப் பெரிய தவறு. இதன் காரணமாகவே அங்கு குழப்பம் உருவானது. இதனால், அந்தப் பகுதியை நாட்டோடு முறையாக ஒருங்கிணைக்க முடியாத நிலை இருந்து வந்தது. (ஆட்சியாளர்கள்) ஒவ்வொருவருமே சட்டப்பிரிவு 370-ஐ நீக்க விரும்பினார்கள். ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வந்ததை அடுத்தே ஒரே அடியாக சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்டது.
இதேபோல், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த காலங்களில் ஊரடங்கு என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 200 நாட்களாவது மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால் அது தனக்கு லாபம் என்று காங்கிரஸ் கருதியது. ஆனால், குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி வந்த பிறகு, ஊரடங்கு நாட்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை” என்று அவர் பேசினார்.
குஜராத் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் 5 யாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு யாத்திரையும் 8 முதல் 9 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் யாத்திரையை அகமதாபாத் மாவட்டத்தின் ஜன்சார்கா நகரில் கொடி அசைத்து தொடங்கிவைத்த அமித் ஷா, இரண்டாவது யாத்திரையை இரண்டாவது யாத்திரையை நவ்சாரி மாவட்டத்தின் உனை நகரில் இன்று மாலை தொடங்கி வைக்க இருக்கிறார். பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று இரண்டு யாத்திரைகளை தொடங்கிவைத்தார்.
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.