Last Updated : 13 Oct, 2022 08:37 AM

Published : 13 Oct 2022 08:37 AM
Last Updated : 13 Oct 2022 08:37 AM

‘கனகபுரா பாறை' டி.கே.சிவகுமார் குறி வைக்கப்படுவது ஏன்?

பெங்களூரு: இன்றைய தேதியில் பாஜகவினராலும், மத்திய, மாநில‌ அரசுகளின் ஏஜென்சிகளாலும் அதிகமாகக் குறி வைக்க‌ப்படுவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ அல்ல. தொட்டாலஹள்ளி கெம்பேகவுடா சிவகுமார் தான். சுருக்கமாக டிகேசி.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான சிவகுமாருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் சொந்த கட்சியினருமே உள்ளடி வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பது முரண் நிறைந்த நிதர்சனம்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுராவை அடுத்துள்ள தொட்டாலஹள்ளியை சேர்ந்தவர் டி.கே.சிவகுமார். கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஒக்கலிகா பிரிவை சேர்ந்த இவர், 7 முறை எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். அவற்றில் 4 முறை முக்கியமான துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த டி.கே.சிவகுமார் இயல்பிலேயே எதற்கும் அஞ்சாத நெஞ்சம்படைத்தவர். பெங்களூரு ஆர்.சி.கல்லூரியில் படிக்கும் போதே காங்கிரஸில் இணைந்து மாணவர், இளைஞர் காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டார்.

அந்த வெற்றிகள் கொடுத்த உற்சாகத்தில், 1985-ல் முதல் தேர்தலிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்து போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தாலும் இளைஞர் காங்கிரஸ் செயலாளராக துடிப்பாக வலம் வந்தார்டி.கே.சிவகுமார். கடந்த 1989 தேர்தலில் வெற்றி பெற்ற இவர், 27 வயதில் பங்காரப்பா அமைச்சரவையில் அமைச்சரானார். ராம்நகர், கனகபுரா, ஹாசன், ஹொலேநர்சிபுரா ஆகிய ஒக்கலிகா மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.

இதனால் தேவகவுடா குடும்பத்தின் நேரடி பகைக்கு ஆளானார். இவரை வீழ்த்துவதற்காக 1999-ல் தேவகவுடா தன் மகன் குமாரசாமியை சாத்தனூர் தொகுதியில் நிறுத்தினார். ஆனால், குமாரசாமியை 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவகுமார் தோற்கடித்தார். இதனால் 'சாத்தனூர் சிங்கம்' என்று அழைக்கப்பட்டார்.

2004-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் கனகபுரா தொகுதியில் தேவகவுடாவுக்கு எதிராக தனது ஆதரவாளர் தேஜஸ்வி ரமேஷை நிறுத்தினார். ஒக்கலிகர்களின் தலைவரான‌ தேவகவுடாவை தோற்கடிப்பேன் என சவால்விட்டு, அவரை தோற்கடித்தார். அன்றில் இருந்து இன்று வரை கனகபுராவின் அசைக்க முடியாத கற்பாறையாக டி.கே.சிவகுமார் மாறி இருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவை தோற்கடித்ததால் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் காங்கிரஸ் மேலிடத்திலும் டி.கே.சிவகுமாரின் செல்வாக்கு அதிகரித்தது.

இதேபோல பெல்லாரி ரெட்டி சகோதரர்களுக்கும் இவருக்கும் இடையே சுரங்கத் தொழிலில் மோதல் ஏற்பட்டது. டி.கே.சிவகுமாரை, 'பெல்லாரியில் காலை வைத்தால் காலை வெட்டி விடுவேன்' என ஜனார்த்தன ரெட்டி பகிரங்கமாக மிரட்டினார். ஆனால் டி.கே.சிவகுமார் பெல்லாரிக்கு தைரியமாக பாத யாத்திரை சென்றதுடன், அங்கு தனது ஆதரவாளர் உக்ரப்பாவை வெற்றி பெற செய்தார். இதனால் பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கோட்டை என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தார்.

இதேபோல பெலகாவி ஜார்கிஹோலி சகோதரர்களுடனும் மோதி, டி.கே.சிவகுமார் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தார். இதன் மூலம் கர்நாடக அரசியலில் எவராலும் வீழ்த்த முடியாதவராக மாறினார்.

காங்கிரஸின் ஆபத்பாந்தவர்

இவருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. 2001-ல் மகாராஷ்டிராவில் குதிரை பேரத்தால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை பெங்களூரு அழைத்து வந்து பாதுகாக்கும் பொறுப்பை டி.கே.சிவகுமாருக்கு வழங்கினார். ஈகில்டன் ரெசார்ட்டில் இரும்புக் கோட்டையில் வைத்திருப்பதைப் போன்று எம்எல்ஏ.க்களை பாதுகாத்து ஆட்சியை காப்பாற்றினார். அதன்பிறகு இந்தியாவில் ராஜ‌ஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் என காங்கிரஸ் அரசுக்கு என்ன நெருக்கடி வந்தாலும் எம்எல்ஏ.க்களை பாதுகாக்கும் காவலனாக டி.கே.சிவகுமார் மாறினார்.

கடந்த 2017-ல் குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை வெற்றி பெற வைக்க சோனியா காந்தி முடிவெடுத்தார். அதனை கவுரவப் பிரச்சினையாக கருதிய அமித் ஷா, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை பாஜக.வுக்கு இழுக்க முயற்சித்தார். ஆனால் டி.கே.சிவகுமார், குஜராத் எம்எல்ஏ.க்களை தனி விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வந்து, அகமது படேலை ஜெயிக்க வைத்தார். இதனால் சோனியா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.

கடந்த 2018-ல் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. குதிரை பேரம் மூலம் பாஜக எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் இறங்கியது. டி.கே.சிவகுமார் ஒவ்வொரு எம்எல்ஏ.வையும் தனித்தனியாக கண்காணித்து பாதுகாத்ததாலேயே அந்த கூட்டணி அரசு ஓராண்டை நிறைவு செய்தது. குமாரசாமியின் நாற்காலியை காப்பாற்றியதால் டி.கே.சிவகுமார், ஒரு துணை முதல்வர் போல வலம் வந்தார்.

அகமது படேல் விவகாரத்தில் பாஜக மேலிடத்தின் நேரடி கோபத்துக்கு ஆளான டி.கே.சிவகுமார் மீது தொடர்ச்சியாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் வருமான வரி சோதனை, அமலாக்கத் துறை சோதனை, சிபிஐ சோதனை, மத்திய குற்றப் பிரிவு விசாரணை என பல்முனை தாக்குதல்கள் அரங்கேற தொடங்கின. அவரது கல்வி, ரியல் எஸ்டேட், போக்குவரத்து, ஏற்றுமதி, சுரங்கம் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு ரூ.8.59 கோடி கைப்பற்றப்பட்டது. ரூ.74.93 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது 3 முறை நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட டி.கே.சிவகுமாரிடம், ''காங்கிரஸில் இருந்து விலகி விட்டால் வழக்குகளை வாபஸ் வாங்கி விடுவதாக'' பாஜக தரப்பில் ரகசியமாக டீல் பேசப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் டி.கே.சிவகுமார், 'எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்' என பகிரங்கமாக சொல்லிவிட்டார்.

இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வரும் நிலையில், கடந்த வாரம் புதிதாக டி.கே.சிவகுமார், நேஷனல் ஹெரால்டு வழக்கிலும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி விசாரிக்கப்பட்ட வழக்கில், டி.கே.சிவகுமாரும் சேர்க்கப்பட்டுள்ளதால் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டி.கே.சிவகுமாரின் நிறுவனத்தில் இருந்து காங்கிரஸின் யங் இந்தியா நிறுவனத்துக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக‌ அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது. இதனால் 15 நாட்களில் 2-வது முறையாக அமலாக்கத் துறை டி.கே.சிவகுமாரை டெல்லிக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறது.

கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வருவதால் டி.கே.சிவகுமார் பாஜக மேலிடத்தின் கோபத்துக்கு மீண்டும் ஆளாகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2023-ல் நடக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையும், 2024 நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள காங்கிரஸ் இவரது ‘கை'யையே நம்பி இருக்கிறது. கடந்த தேர்தலில் வேட்பு மனு தாக்க‌லின்போதே தனது சொத்து மதிப்பு ரூ.851 கோடி என பகிரங்கமாக அறிவித்தார்.

அதனால் இந்த தேர்தலில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க 6 மாதங்களுக்கு முன்பு தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டார் டி.கே.சிவகுமார். காங்கிரஸின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளரான‌ சிவகுமாரின் வியூகங்களை சமாளிக்க முடியாமல் பாஜக.வினர் திணறுகின்றனர். இதனால் வழக்குகளைப் போட்டு அவரை முடக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக தெரிகிற‌து. கடந்த ஒரு மாதத்தில் அமலாக்கத் துறை இரு முறையும், சிபிஐ ஒரு முறையும் அவரை விசாரித்தது அதையே காட்டுகிறது.

காங்கிரஸின் கஜானாவாகவும், கஜேந்திரனாகவும் இருக்கும் டி.கே.சிவகுமார் இந்த குறிகளில் இருந்து எப்படி தப்பப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x