

புதுடெல்லி: ஹரியாணா மாநில சுகாதாரத் துறைஅமைச்சர் அனில் விஜி ஊடகங்களில் நேற்று தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால் காம்பியா நாட்டில் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்தது. இதையடுத்து, சோனிபட் நகரில் மெய்டன் பார்மாவுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வுக்குப் பின் இருமல் மருந்துகள் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மெய்டன் பார்மாவின் குழந்தைகளுக்கான இருமல் மருந்தான ப்ரோமெத்தாஸைன், கோஃபெக்ஸ் மாலின், மேக்ஆஃப் மற்றும் மேக்ரிப் ஆகிய நான்கு தயாரிப்புகளில் அளவுக்கு அதிகமான டைஎத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பதாகவும், நச்சுத்தன்மையுடைய இந்த ரசாயனங்கள் குழந்தைகளின் சிறுநீரகத்தை கடுமையாக பாதிப்படைய செய்யும் என்றும் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் அறிவித்தது.
இந்த வகை இருமல் மருந்துகளை அமெரிக்க நிறுவனம் மூலமாக காம்பியா இறக்குமதி செய்தது. அங்கு 69 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளுக்கும் தொடர்பிருப்பதாக காம்பியா போலீஸார் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.
மெய்டன் நிறுவனம் மூன்று ஆலைகள் வாயிலாக ஆண்டுக்கு 22 லட்சம் மருந்து பாட்டில்கள், 60 கோடி காப்சூல்ஸ், 1.8 கோடி ஊசி மருந்துகள், 3 லட்சம் ஆயின்மெண்ட் டியூப்ஸ் மற்றும் 120 கோடி மாத்திரைகளை தயாரித்து வருவதாக தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
இதன் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மெய்டன் பார்மா தெரிவித்துள்ளது.