

புதுடெல்லி: கடந்த 2000-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 66ஏ என்ற பிரிவு இருந்தது. அதில் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவலை வெளியிட்டால், அவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் என இருந்தது.
மும்பையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டது தொடர்பாக தானே மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சமூக ஊடகத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு மற்றொரு பெண் ‘லைக்’ போட்டிருந்தார். இதற்காக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த சட்டப்பிரிவில் திருத்தம் கோரி சட்ட மாணவி ஷ்ரையா சிங்கால் கடந்த 2012-ம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஐ.டி சட்டத்தின் 66ஏ பிரிவை நீக்க 2015 மார்ச் 24-ம் தேதி உத்தரவிட்டது.
அதன்பின்பும் இந்த பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பியுசிஎல் என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, எஸ்.ஆர்.பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மக்களின் உரிமையை நேரடியாக பாதிக்கும் சட்டப்பிரிவு என்பதால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு கடந்த 2015-ல் நீக்கப்பட்டது. இந்த பிரிவின் கீழ் யார் மீதும் வழக்கு தொடர கூடாது. இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் உள்துறை செயலாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.