

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இதைப் பின்பற்றி ராணுவத்திலும் மின்சார வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் தொலைதூர பகுதிகள், பணி சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு படிப்படியாக மின்சார வாகனங்கள் ராணுவத்தில் இணைக்கப்படும். இதன்மூலம் 25% இலகுரக வாகனங்கள், 38% பேருந்துகள் மற்றும் 48% மோட்டார் சைக்கிள்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். இவற்றுக்காக, வாகன நிறுத் துமிடங்கள், குடியிருப்பு வளாகங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.