

பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கை, ஒரே சமயத்தில் 4 அசுரர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
வடக்கு கோவாவில் உள்ள திவிம் கிராமத்தில் பாஜகவின் ‘வெற்றி சங்கல்பம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மனோகர் பாரிக்கர் கூறும்போது, “ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்கள் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு நம் விரோதி நாட்டினால் நம் நாட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றன. இது லட்சம் கோடியாகவும் இருக்கலாம், இவை நம் நாட்டை சீர்குலைக்கச் செய்யும் முயற்சியாகும்.
பல எல்லைகள் வழியாகவும் கள்ள ரூபாய் நோட்டுகளை உள்ளுக்குள் அனுப்பி நம் பொருளாதாரத்தை நம் விரோதி நாடு சீரழிக்க முயன்று வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் நாட்டு மக்கள், நம் ராணுவத்தினரின் உயிர்களைப் பறிப்பது மட்டுமல்ல நம் பொருளாதாரத்தின் மீதும் மறைமுக தாக்குதல் நடைபெற்று வருகிறது.
கறுப்புப் பணம், ஊழல் பணம், பயங்கரவாதப் பணம், போதை மருந்துப் பணம் என்ற 4 அசுரர்கள் மீது மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். காஷ்மீரின் நிரந்தர தீவிரவாதம், வடகிழக்கு தீவிரவாதம், நக்சல் பயங்கரவாதம் ஆகியவை இந்த கள்ளக் நோட்டுகளினால்தான் நடைபெறுகிறது.
பாகிஸ்தானிலிருந்து கள்ள நோட்டுகள் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் நவம்பர் 8-ம் தேதி 8 மணியளவில் பிரதமர் மோடி ஒரேயொரு குண்டைப் போட்டு கள்ள நோட்டை ஒரே அடியில் புழக்கத்திலிருந்து விரட்டினார்” என்றார் மனோகர் பரிக்கர்.