

அயோத்தி பிரச்சினைக்கு விரை வில் தீர்வு கிடைக்கும் வகையில் நிலுவையில் உள்ள வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக சுவாமி தாக்கல் செய்த மனுவில், “அயோத்தி பிரச்சினையில் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என சுவாமி வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை அடுத்த வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
அயோத்தி வழக்கில் சுவாமி தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அனுமதி அளித்தது.
இது தொடர்பாக சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் வழக்கப்படி சாலை அமைத்தல் உள்ளிட்ட பொது நோக்கத்துக்காக மசூதியை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் கோயில் ஒருமுறை கட்டப்பட்டால் அது இடம் மாற்றப்படுவதில்லை. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும். அயோத்தி பிரச்சினையில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான பல்வேறு வழக்குகளைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி பாபர் மசூதி நிலத்தை 3 பகுதிகளாக பிரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.