Last Updated : 29 Jul, 2014 09:44 AM

 

Published : 29 Jul 2014 09:44 AM
Last Updated : 29 Jul 2014 09:44 AM

அசோக் சவாணுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

தேர்தல் செலவு குறித்து அசோக் சவாணுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாண். இவர் 2009-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போகார், கின்ஹால்கர் ஆகிய தொகுதி களில் போட்டியிட்டார். போகார் தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தலின்போது, மராட்டிய பத்திரிகை ஒன்றுக்கு, பணம் கொடுத்து செய்தியை வெளியிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை இவரது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

இந்த விவகாரத்தில் அசோக் சவாணை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, கிரித் சோமையா, சுயேச்சை வேட்பாளர் மாதவ்ராவ் கின்ஹால்கர் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித் தனர். அசோக் சவாண் தற்போது நான்டட் தொகுதி எம்பி-யாக இருப்ப தால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், கடந்த 13-ம் தேதி அசோக் சவாணுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

‘நீங்கள் 2009-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்துள்ள தேர்தல் செலவு கணக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி இல்லை. எனவே உங்களை பதவி நீக்கம் செய்வது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது,’ என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு 20 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி வலியுறுத்தப்பட் டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அசோக் சவாண் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சட்டமன்றத் தேர்தலின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற சில கட்சிகள் சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு பத்திரிகையில் விளம்பரச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள செய்திக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அச்செய்தியை வெளியிட்ட பத்திரிகை நிறுவனமே தேர்தல் ஆணையத்திடம் மனுவாக தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நான் தவறு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்திருப்பது நியாயமற்றது. தேர்தல் ஆணைய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்,’ என்று கூறியிருந்தார்.

கபில் சிபல் ஆஜர்

இம்மனு நீதிபதி சுரேஷ் கைத் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அசோக் சவாண் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்துள்ளோம். கடந்த 2009-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அசோக் சவாண் ரூ.6.85 லட்சம் செலவு செய்துள்ளார். தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வரும் முன்பு விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை’ என்று வாதிட்டார்.

புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷன், ‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது. சவாண் மீதான புகார் குறித்து 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, ஏற்கனவே மே 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதித்தால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகி விடும்.

மேலும், விளக்கம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸுக்கு இந்த கட்டத்தில் தடை விதிக்க முடியாது. தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தடை விதிக்க முடியும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பையும் கேட்ட நீதிபதி, ‘தேர்தல் ஆணையமே 45 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கவில்லையே? தேர்தல் ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில் முறையாக கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று முடிவெடுத்து தெரிவிக்கப்பட்டுள்ள போது, என் உத்தரவை என்னால் நியாயப்படுத்த முடியும்,’ என்று கூறி தேர்தல் ஆணைய நோட்டீஸுக்கு தடை விதித்தார்.

இந்த வழக்கில் புகார்தாரர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, கிரித் சோமையா, மாதவ்ராவ் கின்ஹால்கர் ஆகியோரும் நவம்பர் 5-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x