ஃபிஃபா யு-17 உலகக் கோப்பை | இந்திய மகளிர் அணித் தலைவர் வீட்டிற்கு டிவி வழங்கிய ஜார்க்கண்ட் அரசு

ஃபிஃபா யு-17 உலகக் கோப்பை | இந்திய மகளிர் அணித் தலைவர் வீட்டிற்கு டிவி வழங்கிய ஜார்க்கண்ட் அரசு
Updated on
1 min read

ரஞ்சி: ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதை இன்று பார்க்க இருக்கின்றனர்.

நடைபெற்றுவரும் ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி, வலிமையான அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு அஸ்டம் ஓரான் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

ஓரான், ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோருக்கு தங்கள் மகள் விளையாடுவதை பார்ப்பது என்பது இயலாது. இந்த நிலையில், ஓரான் விளையாடுவதை அவர்களின் குடும்பத்தினர் பார்க்க வசதியாக ஜார்கண்ட் அரசு போட்டித் தொடங்குவதற்கு முன்பாக, ஓரானின் வீட்டில் ஒரு தொலைக்காட்சி பெட்டியும், அதற்கு மின்சாரத்திற்காக இன்வெட்டர் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வசதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கும்லா மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில், "அனைவரும் தயார் உள்ளனர். போட்டிக்காக அஸ்டம் ஓரான், அவர் விளையாடுவதை பார்க்க பார்வையாளராக அவரது பெற்றோர் மற்றும் கிராமத்தினர். (டிவி மற்றும் இன்வெட்டர் வழங்கப்பட்டுள்ளது)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்டம் ஓரானால் அவரது கிராமத்திற்கு நல்ல சாலை வசதியும் கிடைத்துள்ளது. அந்த சாலை போடும் பணியில் அவரது பெற்றோரும் கூலியாட்களாக வேலை செய்துவருகின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டித் தொடரில் அறிமுகமாகும் மூன்று அணிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in