

மக்களின் தேவைக்கேற்ற பணத்தைத் தரமுடியாமல், ஏடிஎம்களில் உள்ள பணம் விரைவில் காலியாகி விடுவதால், ஏடிஎம் இயந்திரங்களை மறு அளவீடு செய்து, புதிய நோட்டுகளை நிரப்புவதை விரைவுபடுத்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ். முந்த்ரா தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
இந்த முயற்சி, ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய வங்கிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் பிரதமர் மோடி கலந்தாலோசித்த பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின்படி, ''அனைத்து ஏடிஎம்கள்/ பணம் கையாளும் இயந்திரங்களை மறு சீரமைப்பு செய்து, புதிய வடிவமைப்புகளோடு வெளியே வந்துள்ள புது 2000 ரூபாய் நோட்டுக்கு ஏற்றவாறு இயந்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்'' என்று கூறியுள்ளது.
அனைத்து ஏடிஎம்களும் துல்லியமான மறுசெயல்பாட்டுக்கு வரும் வகையில் திட்டமிட்டு வருவதாக சிறப்பு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் நிதி மற்றும் உள்துறை அமைச்சக பிரதிநிதிகள், இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், ஹச்டிஎஃப்சி வங்கிகள் மற்றும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
''சிறப்பு நடவடிக்கைக் குழுவின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஏடிஎம் இயந்திர உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், பணத்தை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பயன்படுத்தப்படுவார்கள்'' என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலர் சக்திகாந்த தாஸ், ''அனைத்து ஏடிஎம்களையும் மறு சீரமைப்பு செய்து, புது 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்பும் வகையில் சிறப்பு நடவடிக்கைக் குழு செயல்படும்'' என்று டெல்லியில் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ். முந்த்ரா