

இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உறுதியளித்தார்.
மக்களவையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து, இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும். ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரே நேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்" என்றார்.
மேலும், "பயணிகள் போன், எஸ்.எம்.எஸ். மூலமாக உணவு தேவை குறித்து தகவல் அனுப்ப வழிவகை செய்யப்படும். அதேபோல், பயணிகள் உணவுத்தரம் குறித்த பின்னூட்டத்தை ரயில்வே துறைக்கு அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்படும்" என்றார்.
ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும் என்ற அவர், "டிக்கெட் முன்பதிவு முறைகள் மேம்படுத்தப்படும். மொபைல் மூலமாக, தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படும்" என்றார் ரயில்வே அமைச்சர்.