Published : 10 Oct 2022 09:29 AM
Last Updated : 10 Oct 2022 09:29 AM

'காங்கிரஸுக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய சக்தி நானே..' - சசி தரூர் பேச்சு

சசி தரூர்

மும்பை: காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய விணையூக்கி நான் தான் என்று பேசியுள்ளார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி சசி தரூர் மும்பையில் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது டவுன்ஹாலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர், காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய விணையூக்கி நான் தான் என்று கூறியுள்ளார்.

அவருடைய பேச்சிலிருந்து, "காங்கிரஸ் கட்சி நாட்டை கடந்த காலங்களில் சிறப்பாகவே ஆண்டுள்ளது. இப்போது கட்சி தன்னுடைய வாக்காளர்களை மீண்டும் வென்றெடுக்க வேண்டும். அதற்கு கட்சி வாக்காளர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுக்குள் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அப்போது அவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள். பாஜக 2024ல் எதிர்க்கட்சியாக அமர தயாராகிக் கொள்ளட்டும்.

காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் வர வேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டுவரும் விணையூக்கியாக நான் இருப்பேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் என்னைப் போலவே கார்கேவும் போட்டியிடுகிறார். அவர்தான் காங்கிரஸ் கட்சியின் காந்தி குடும்பத்தின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர் என்று ஒருசிலர் வேண்டுமென்றே கட்டமைக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளர் என்று யாரும் இல்லை. இது நேர்மையான தேர்தல் என்று தேர்தல் குழு தலைவர் மதுசூதனன் மிஸ்த்ரி இரண்டுமுறை தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் கட்சிக்குள் கார்கேவுக்கான ஆதரவிலும் எனக்கான ஆதரவிலும் வித்தியாசம் இருக்கிறது. கார்கே செல்லுமிடமெல்லாம் மாலையும் வரவேற்பும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆனால் நான் செல்லுமிடங்களில் கட்சியின் கடைநிலை தொண்டர்கள் தான் எனை வரவேற்கின்றனர்.

என்னை யாரும் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுமாறு வலியுறுத்தவில்லை. ஒருவேளை கார்கேவே கூட என்னை வாபஸ் பெறுமாறு கோரியிருந்தால் நான் 'I am sorry' என்று தான் கூறியிருப்பேன். எனக்கு சிற்சில வருத்தங்கள் இருக்கின்றன. ஜி23 குழு காங்கிரஸ் கட்சியில் புரட்சிகர மாற்றங்கள் வேண்டும் எனக் கூறி இடம்பெற்ற மணீஷ் திவாரி கூட இப்போது கார்கேவுக்கு ஆதரவாக நிற்கிறார் என்பதும் அதில் ஒன்று. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களை ராகுல் காந்தி ரிமோட் கன்ட்ரோல் மூலம் அவர்களை இயக்கலாம் என்ற கருத்தை நான் புறக்கணிக்கிறேன். ராகுல் காந்தி இது குறித்து ஏற்கெனவே பதிலளித்துவிட்டார். அவர் கட்சியை கட்டுப்படுத்த நினைத்திருந்தால் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றிருந்தால் மட்டுமே போதுமானது அல்லவா?

அம்பானி, அதானி என்றால் அலர்ஜி இல்லை: எனக்கு அம்பானி, அதானியைக் கண்டு அலர்ஜி எல்லாம் இல்லை. ஒரு காங்கிரஸ்காரனாக என் மாநிலத்தில் முதலீடு செய்து வேலைவாய்ப்பைப் பெருக்கி வருவாய்க்கு வித்திடும் யாரையும் நான் வரவேற்பேன். என் சொந்த தொகுதியான திருவனந்தபுரத்தில் அதானி விமானநிலையம் கட்டும்போது அதுதான் நிகழ்ந்தது. நான் 1991ன் தாராளமயமாக்கல் கொள்கையை வரவேற்கும் காங்கிரஸ்காரன். இப்போது இருப்பதுபோல் வர்த்தகங்கள் கடுமையான சட்டதிட்டங்களில் சிக்கியிருப்பதை விரும்பாதவன். அதேவேளையில் முதலீடுகள் மூலம் வரும் வருவாய் அரசுக்குக் கிடைத்து அது ஒடுக்கப்பட்டோரை கைதூக்கிவிட உதவுவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அம்பானியோ அதானியோ நாட்டின் நலன் கருதி மூலதனம் செய்து வேலைவாய்ப்புகளைப் பெருக்கினால் வரவேற்பேன். இவ்வாறு சசி தரூர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x