

புதுடெல்லி: குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
குஜராத்தில் 3 நாள் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் நாளான நேற்று மொதேரா கிராமத்தில் ரூ.3,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்துப் பேசியதாவது:
குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமம், சூரியக் கோயிலுக்கு பிரபலமானது. இனி அது சூரிய மின்சக்திக்கும் (சோலார் பவர்) உலக அளவில் அறியப்படும் கிராமமாக இருக்கும். சோலார் சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கிய மாபெரும் பயணத்துக்கு இது சிறந்த தொடக்கமாக அமையும்.
24 மணி நேரமும் மின்சாரம்
மொதேரா கிராம மக்கள் இனி மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே தயாரித்துக் கொள்வர். பயன்பாட்டுக்குப் போக எஞ்சியுள்ள மின்சாரத்தை விற்பனைசெய்து, அதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்ட முடியும். 24 மணி நேரத்துக்கும் தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் பெறும் வகையில் மொதேரா கிராமத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரைகளில் 1,300 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, ஒரு கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை.
இந்த சோலார் அமைப்பு முற்றிலும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்துடன் (பிஇஎஸ்எஸ்) இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரத்திலும் மின்சாரம் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோலார் மேம்பாட்டுத் திட்டத்தை இரு கட்டங்களாக உருவாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.80 கோடி முதலீடு செய்துள்ளன. மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குஜராத் மாநில அரசு 12 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சூரியக் கோயில்
தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் மொதேரா கிராமத்தில் உள்ள சூரியக் கோயிலுக்கு, சூரிய சக்தியில் இயங்கும் 3-டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், அதன் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.
குஜராத் மாநில மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஜாதி, மதம், அரசியல் பின்னணி பார்க்காமல் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.
உலக அளவில் பிரபலமான சூரியக் கோயில் மொதேரா கிராமத்தில் 1026-27-ல்சாளுக்கிய வம்ச மன்னர் பீமன்என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயிலைமையமாகக் கொண்டே தற்போது சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.