

அய்சால்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதியிலும் பாஜக போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மலைப்பகுதிகள் நிறைந்த அம்மாநிலத்தில் 39 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தொகுதி மட்டும் பொது தொகுதி ஆகும். அங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 28 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜோரம் மக்கள் இயக்கம் 6, காங்கிரஸ் 5, பாஜக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. எம்என்எப் கட்சியின் ஜோரம்தங்கா முதல்வராக உள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும் வடகிழக்கு மண்டல அரசியல் முன்னணியில் எம்என்எப் ஒரு அங்கமாக உள்ளது. ஆனாலும், எம்என்எப் கட்சியைச் சேர்ந்த 16 மூத்த தலைவர்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அனைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் வன்லால்முகா தெரிவித்துள்ளார்.