

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ ராஜ் வல்லப் யாதவ், இன்று விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் நவதா தொகுதி எம்எல்ஏ ராஜ் வல்லப் யாதவ். இவர் பிஹார் ஷெரிப் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மைனர் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ராஜ் வல்லப் தலைமறைவானார். வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். பாலியல் புகார் காரணமாக ராஷ்ட்ரிய ஜனதா தள மேலிடம் அவரைக் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இடை நீக்கம் செய்தது. அண்மையில் பாட்னா உயர் நீதிமன்றம் ராஜ் வல்லபுக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான ராஜ் வல்லப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிஹார் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24-ம் தேதி வரை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து வழக்கு தொடர்பாக வாக்குமூலம் பெறக் கூடாது என விசாரணை நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இவ் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜ் வல்லப் யாதவின் ஜாமீனை இடைக்காலமாக ரத்து செய்த நீதிபதிகள், இன்று அவர் பிஹார் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் இரு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி, அடுத்த விசார ணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.