போபால் என்கவுன்ட்டர் பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள காவல் கட்டுப்பாட்டு அறை ஆடியோ பதிவு

போபால் என்கவுன்ட்டர் பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள காவல் கட்டுப்பாட்டு அறை ஆடியோ பதிவு
Updated on
1 min read

போபால் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்ததாகக் கருதப்படும் 9 நிமிட ஆடியோ வெளியாகி, 'சிமி' என்கவுன்ட்டரில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஆனால் ஆடியோவின் உண்மைத் தன்மை இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை.

போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த அன்று பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோவில் காவல்துறையினர், தப்பியோடிய 8 பேரையும் என்கவுன்ட்டர் செய்ய ஆணையிடுகின்றனர். அவர்களைக் கைது செய்யும் நோக்கம் அவர்களின் பேச்சில் இல்லை. ஆடியோவின் குறிப்பிட்ட இடத்தில் ஒரு போலீஸ்காரர், ''நீங்கள் பின்வாங்காதீர்கள்; அவர்களை முடித்துவிடுங்கள்'' என்கிறார்.

இதற்கு முன்னாலேயே 'சிமி' சம்பவம் குறித்து இரண்டு வீடியோக்கள் வெளியாகின. அதில் ஒரு காவலர், தப்பியோடியவரைச் சுடுவது போன்ற காட்சி, அருகில் இருந்தே எடுக்கப்பட்டிருந்தது.

ஆடியோவில் மேலும் பேசும் ஒரு காவல்துறை அதிகாரி, ''அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்து விட்டார்கள், அவர்களுக்கு இப்போது நாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்'' என்கிறார்.

மற்றொரு காவலர், தன்னுடைய சக அதிகாரிகளை எச்சரித்து, ''சம்பவ இடத்துக்குச் செல்வதில் தாமதப்படுத்த வேண்டும், இல்லையெனில் இன்னொரு பக்கத்தில் இருந்து வரும் காவலர்களால் குழப்பம் ஏற்படும்'' என்கிறார். மற்றொருவரோ, ''ஒரு கைதியையாவது உயிரோடு பிடித்தால்தான் சதியின் முழு பின்னணி தெரியக்கூடும்'' என்கிறார்.

என்கவுன்ட்டருக்குப் பிறகு, காவலர்கள் கொலைகளைக் கொண்டாடும் குரல்கள் கேட்கின்றன. ''நல்லது. அவர்கள் கீழே விழுந்துவிட்டார்கள். சுடுவதை நிறுத்திவிடுங்கள்'' என்கின்றனர்.

ஆனால் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியானதாக கூறப்படும் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in