

ராமாயணம் தொடரில் விபீஷணன் வேடமேற்று நடித்த முகேஷ் ராவலின் சடலம் மும்பை புறநகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்ததாக ரயில்வே போலீஸ் தெரிவித்துள்ளனர்.
66 வயதான முகேஷ் ராவல் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்து போனதாக தெரிகிறது. இவரது உடல் போரிவலி, கந்திவலி ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செவ்வாயன்று காலை கிடந்துள்ளது.
ஆனால் இவர் முகேஷ் ராவல்தான் என்பது இவரது உறவினர் மறுநாள் அடையாளம் கண்ட பிறகே தெரியவந்தது என்று ரயில்வே போலீஸ் கமிஷனர் நிகேத் கவுஷிக் தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் தெரிவிக்கும் போது, “முதலில் இவர் யார் என்ற அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. ரயில்வே போலீஸார் அனைத்து காவல்நிலையங்களுக்கும் இவரது புகைப்படத்தை அனுப்பி வைத்தனர். இவரது மருமகன் கந்திவலி ரயில் நிலையத்திற்கு வந்தார், பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் இது முகேஷ் ராவல் என்பதை உறுதி செய்தார்.
ராமாயணம் தவிர முகேஷ் ராவல் குஜராத்தி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் கூட குஜராத்தி மொழி தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார்.