Published : 09 Oct 2022 05:04 AM
Last Updated : 09 Oct 2022 05:04 AM

அக்னிப் பாதை திட்டம் | டிசம்பர் மாதத்துக்குள் விமானப்படையில் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு - அடுத்த ஆண்டுமுதல் பெண்கள் தேர்வு

சண்டிகர்: இந்திய விமானப்படைக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறினார்.

இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சண்டிகர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய விமானப்படையில், போர் விமானங்களின் படைப் பிரிவுகள் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நமது போர்த் திறனைத் தக்கவைத்துக்கொள்ள, நான்காம் மற்றும் ஐந்தாம்
தலைமுறை போர் விமானங்கள், அவாக்ஸ் விமானங்கள், நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை விமானப்படையில் சேர்க்க வேண்டும். 114 நான்காம் மற்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலுக்காக இந்திய விமானப்படை காத்திருக்கிறது.

இந்த போர் விமானங்கள், சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களின் திறனுக்குச் சமமாகவும் அல்லது அதைவிட திறன் மிகுந்ததாகவும் இருக்கும். 83 இலகுரக போர் விமானங்களை (எல்சிஏ எம்கே1ஏ) தயாரிக்க இந்திய விமானப்படை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எம்கே-2 இலகுரக போர் விமானங்கள் மற்றும் 5-ம் தலைமுறை நடுத்தர ரக நவீனப் போர் விமானங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் விமானப்படை முழு உறுதியுடன் உள்ளது. விமானப்படையின் திறனை அதிகரிக்க, ரேடார் கருவிகள் பொருத்தப்பட்ட 6 அவாக்ஸ் ரக போர் விமானங்களை உள்நாட்டில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா போர் விமானங்களை வாங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாம். இடையூறுகள் குறைவாக இருக்க, பாதுகாப்புப் படைகள் தற்சார்பு உடையவையாக இருக்கவேண்டும். இதற்காக தற்சார்பு இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

போர் முறையில் ட்ரோன்கள், ஹைபர்சோனிக் ஆயுதங்கள், செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவிகள் போன்றவை புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன. விரைவாக முடிவெடுத்தல் மற்றும் பிக் டேட்டா பகுப்பாய்வில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. தரைவழி, கடல்வழி, வான்வழித் தாக்குதல் போன்ற வழக்கமான போர் முறைகளுடன், தற்போது விண்வெளி மற்றும் சைபர் தாக்குல் என போர் முறைகள் விரிவடைந்துள்ளன. போர் முறைகள், ஆயுதங்கள் ஆகியவை தற்போதைய சூழலுக்கு ஏற்ப நவீனத் தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும். பழங்கால மனநிலையில், எதிர்காலத்தில் போரிட முடியாது என்ற உண்மையை ஏற்க வேண்டும். அதற்கேற்ப விமானப்படையின் பயிற்சியையும் அதிகரிக்க வேண்டும்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் விமானப்படையில் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இந்திய இளைஞர்களின் திறனை நாட்டின் சேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இந்திய விமானப்படைக்குக் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் அக்னி வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் அக்னிப் பாதை திட்டத்தின் கீழ், விமானப்படையில் பெண்களும் சேர்க்கப்படுவர். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்னி வீரர்கள் நல்ல திறமையுடன் விமானப்படையில் பணியாற்றும் வகையில், பயிற்சி முறைகளை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம்.

விமானப்படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க, ஆயுதங்கள் பிரிவை புதிதாக உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பிரிவு மூலம் பலவகை ஏவுகணைகளை ஏவுவதற்கான பயிற்சி, ஆளில்லா போர் விமானங்களை இயக்குவதற்கானப் பயிற்சி போன்றவை அளிக்கப்படும். இதன் காரணமாக விமான இயக்கப் பயிற்சி செலவு ரூ.3,400 கோடி குறையும்.
விமானப்படையினருக்கு புதிய வகை போர் சீருடையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு விமானப்படை தலைமை தளபதி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x