காங்கிரஸ் தலைவர் தேர்தல் | “நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” - சசி தரூர்

சசி தரூர் | கோப்புப் படம்
சசி தரூர் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நான் ஒருபோதும் வாபஸ் பெறப்போவதில்லை” என்று சசி தரூர் கூறியிருக்கிறார். வரும் 17-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காந்தி குடும்பத்தின் முழு ஆதரவு பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவும், காங்கிரஸ் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற்றதாக தகவல் வெளியானது. இது குறித்து சசி தரூர் ஒரு காணொலி வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நான் எந்த ஒரு சவாலில் இருந்தும் பின்வாங்குவதில்லை. என் வாழ்நாளில் இதுவரை அப்படி ஆனதில்லை. இனியும் நான் எந்த சவாலில் இருந்தும் பின்வாங்கமாட்டேன்.

நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து பின்வாங்கவில்லை. டெல்லி மேலிடத் தகவல் என்ற பரவும் செய்தி வெறும் புரளி. இந்தப் போட்டி ஒரு போராட்டம். கட்சிக்குள் நடக்கும் நட்பு ரீதியிலான போட்டி. இந்தப் போட்டியில் இறுதி முடிவு வெளியாகும்வரை நான் இருப்பேன். 17-ஆம் தேதி வாக்களிக்க தகுதியுடையவர்கள் வந்து எனக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். நாளைய எதிர்காலத்தை நினைத்தால் சசி தரூருக்கு வாக்களியுங்கள்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை அவர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமை, காந்தி குடும்பத்தின் கைகளிலேயே உள்ளது. இதையே புகாராக எழுப்பும் பாஜகவை சமாளிக்க, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி நிற்க காந்தி குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும் காந்தி குடும்பத்தின் முழு நம்பிக்கையும் ஆதரவும் பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கே வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in