ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப்படம்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப்படம்

வர்ணம், சாதி கோட்பாடுகளை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Published on

நாக்பூர்: வர்ணம், சாதி போன்ற கோட்பாடுகளை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றுடன் சாதி அமைப்புக்கு தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் ரேணுகா போகரே எழுதிய வஜ்ரசூசி துங்க் என்ற புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் நடந்தது. அந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய மோகன் பாகவத், " சமத்துவ சமூகம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. தற்போது அது மறக்கப்பட்டு பல மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது.

முன்பு வர்ணம் மற்றும் சாதி அமைப்புகளில் பாகுபாடு இருக்கவில்லை. அதன் பயன்பாடு மட்டுமே இருந்தது. இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை. அவைகள் மறக்கப்படவேண்டும் என்று சொல்லுங்கள். பாகுபாடுகளை உருவாக்கும் அனைத்தும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட வேண்டும்

உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அந்தத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது. இப்படி தவறுகளை ஏற்றுக் கொள்வதால் நமது முன்னோர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று நீங்கள் கருதுகிறீர்களா, நிஜம் அது இல்லை. ஏனென்றால் உலகின் எல்லா பகுதிகளில் உள்ள முன்னோர்களும் தவறு செய்தவர்களாகவே இருக்கிறார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in