

வாரணாசியில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அஜய் ராய் போட்டியிடுகிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்வாலா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
அஜய் ராய், தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் பிந்த்ரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அஜய் ராய், அக்கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட விரும்பினார். அத்தொகுதி முரளி மனோகர் ஜோஷிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த ராய், பாஜக.வில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.
2012-ம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பிந்த்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
தற்போது மோடியை எதிர்த்து போட்டியிடும் அஜய் ராய் மீது 8 கிரிமினல் வழக்குகள் உள்ளன. தொகுதியில் செல்வாக்கு இருந்தாலும் நரேந்திர மோடியை தோற்கடிக்கும் அளவுக்கு திறமையான வேட்பாளராக ராய் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்வாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்தில் விவசாய உற்பத்தி குறைந்துள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாய நிலங்கள் தொழில்துறையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசு பள்ளிகளில் ஆண்டுக்கு 1.5 லட்சம் குழந்தைகள் பாதியிலேயே படிப்பை கைவிட்டு வெளியேறி வருகின்றனர். குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் பிரச்சாரம் பொய் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த அமித் ஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும், அவரை கைது செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி அரசு தெரிவிக்க வேண்டும்” என்றார்.