

வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக் கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் நேற்று நடந்த விழாவில் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (அனைவருக்கும் வீடு) திட் டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அங்கு அவர் பேசியதாவது:
கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டு பலர் உயிர்பலியாகி இருப்பது வேதனையளிக் கிறது. மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
வரும் 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள் ளது. அதற்குள் அனைத்து இந்தியர்களுக் கும் வீடுகளைக் கட்டிக் கொடுக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக ஏழைகளுக்கான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ வீட்டு வசதி திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தில் விவ சாயிகள் முதல் பழங்குடியினர் வரை அனை வருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டிருப்பதால் பொதுமக்கள் சில சிரமங் களை எதிர்கொண்டுள்ளனர். எனினும் உங்களின் தியாகம் வீண்போகாது. இன்னும் 50 நாட்களில் எல்லா பிரச்சினை களும் தீர்ந்துவிடும்.
அரசின் நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாற உள்ளது. நிதி நிறுவன ஊழல் மூலம் ஏழைகளின் பணத்தை சுரண்டியவர்கள் இன்று எனக்கு எதிராக கை நீட்டுகிறார்கள்.
கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. இதுவரை வங்கிகளில் ரூ.5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசு நீக்குப்போக்குடன் செயல்படும். தேவைப் பட்டால் மாற்றங்கள் செய்யப்படும்.